Saturday, February 7, 2015

67.21 சதவிகிதத்தில் ஒளிந்திருக்கும் நான்…

அர்விந்த் கெஜ்ரிவால் இழைத்த அரசியல் பிழையினால் ஒரு வருடத்துக்குள் டெல்லி மக்களாகிய நாங்கள்  இன்று மீண்டும் ஒருமுறை வாக்களிக்கும் பாக்கியத்தை பெற்றோம்.

நான் வாக்களித்த சாவடி  அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லியின் மையமான சாவடிகளில் ஒன்று.  காலையில் சுமார் 10.00 மணிக்கு நிதானமாக நாஷ்டா முடித்து விட்டு வாக்குச் சாவடிப் பக்கம் எட்டிப் பார்த்தால் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சாவகாசமாக பிரெட் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  எந்த வரிசையும் கிடையாது.  நிதானமாக சென்று நானும் என் மகளும் டெல்லியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் டெல்லியின் வாக்காளர்களாக அதிகாரபூர்வமாக பதிவு பெற்ற  1.19 கோடி மக்களில் இருவரானோம்.

என்னைப் போன்று நாற்காலியில் உட்கார்ந்து கோஷ்டி விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்கும் மற்ற நாற்காலிக்காரர்கள் ஒவ்வொருவராக இந்த கோஷ்டி விளையாட்டில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார்கள்.

வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறும் போது இடது கை ஆட்காட்டி விரலை ஆகாயம் நோக்கிக் காட்டி ஏதோ கெட்ட ஜாடை செய்வது போலவும் டெல்லிக்கு ஆப்பு வைத்து முடித்தாகி விட்டது என்று கூறாமல் கூறுவது போலவும் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ள மேல்நோக்கிய இடது கை ஆட்காட்டி விரலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள்.


2013-ம் ஆண்டில் இதே வாக்குச் சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்த நினைவு இருக்கிறது.    என்னைப் போலவே பலரும் நீண்ட வரிசைகளில் தவிப்புடனும் சலிப்புடனும்  அப்போது வரிசையில் நின்றிருந்தனர். 

அந்த தேர்தலில்  இளைய தலைமுறையினர் அதிகமாக இருந்தார்கள்.  உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.  வாக்குச் சாவடிகளுக்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தார்கள்.  இப்போது அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. வாக்காளர்களை விட போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.
நான் வாக்களித்த சாவடியில் பணம் மது எதுவும் விநியோகிக்கப்படவில்லை.  (இதனை நான் வருத்தத்துடன் கூறவில்லை என்பதை நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்)  ஆனால் என்னுடைய தொலைக்காட்சி நண்பர்கள் செய்தி சேகரிக்க சென்ற  தெற்கு டெல்லி தொகுதிகளிலும் வடக்கு டெல்லி தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடிகளில் பணமும் வாக்காளர்களுக்கு  க்வார்ட்டர் பாட்டில்களும் மிகவும் தாராளமாக வழங்கப்பட்டன என்று கூறினார்கள். 

இந்தக் கட்சி என்று இல்லாமல் எல்லாக் கட்சியுமே இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருந்ததாக என் நண்பர்கள் கூறினார்கள்.  இது குறித்து மிகவும் அதிகமாகக் கூச்சலிட்ட தலைவர்களின் கட்சியினர் கூட மிகவும் சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தார்கள் என்று என் நண்பர்கள் கூறினார்கள்.
இப்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் மிகவும் அதிகரித்துள்ளன.  அங்கங்கு பின்னி எடுத்தார்கள்.    சோதனைக்கு மேல் சோதனை சோதனைக்கு மேல் சோதனை என்று ரவுண்டு கட்டி அடித்தார்கள். 

ஆனால் சீரிய டகால்டிகளில் புலமை கொண்ட கர்ம வீரர்களையும் செயல்வீரர்களையும் எந்த கெடுபிடியும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை வீர தீரத்துடன்   ஊழலுக்கு எதிரான போராளிகளும் மதக் காவலர்களும் தொடர் தோல்விகளால் அம்புறாத் தூணிகளை மரப்பொந்தில் வைத்து விட்டு அலையும் வில்லாளிகளும் இந்த தீரச்செயலில் நீக்கமற நிறைந்திருந்தார்கள் என்று என்னுடைய ஊடக நண்பர்கள் தெரிவித்தனர்.

மாலை 3.00 மணிக்கு மேல் காலையில் இருந்து காற்றாடிக் கொண்டிருந்த வாக்குச் சாவடிகளில்  மதியத்துக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்ததாகக் கூறினார்கள்.  பிற்பகல் வரை வெறும் 24 சதவிகிதமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை மாலை 5 மணிக்கு 63-ல் வந்து நின்றது மிகவும் ஆச்சரியம் அளித்தது.

மதியம் 3.00 மணிக்கு மேல் வந்தவர்கள் மற்றும் அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதான வாக்காளப் பெருமக்கள் என்று கூறப்பட்டது.  பொதுவாக பெரிய கட்சிகள் இவர்களை மதியம் தங்களுடைய சொந்த உழைப்பிலும் ஊக்கத்திலும் வேறு சில கர்ம சிரத்தையான காரணங்களாலும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் இது டெல்லி தேர்தல்களின் வழக்கமான சம்பிரதாயம் என்றும் சில வட இந்திய நண்பர்கள் கூறினார்கள்.  எது  எப்படியோ மதியம் வரை தூங்கி வழிந்து கொண்டிருந்த வாக்கு சாவடிகள் பரபரப்பு அடைந்தன.

2013 சட்டசபை தேர்தலில் 65.60  சதவிகிதமாக இருந்த வாக்காளர் பங்கெடுப்பு இந்தத் தேர்தலில் 67.21 சதவிகிதமாக உயர்ந்திருப்பது நல்லதற்குத்தான் என்று தோன்றுகிறது.

மாலை 6.31 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு எதையும்  வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கெடுபிடியான உத்தரவை பிறப்பித்து இருந்தது.

இதற்காகவே காத்திருந்தது போல பல டிவி ஊடக பண்டிதர்கள் 6.32-க்கு அதகளம் செய்ய ஆரம்பித்தார்கள். 

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் படி ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் டிவி திரைகளில் பெரிய எழுத்துக்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. 

பல்வேறு கருத்துக் கணிப்புக்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 43-45-56 என்றும் பாஜகவுக்கு 26-28-34 என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 3-5-1 என்று குன்சாவாக அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றன பல்வேறு தொலைக்காட் கருத்துக் கணிப்புக்கள்.

அதன் மீது சென்ற வாரம் புதிதாகத் தைத்து வாங்கிய கோட்டு சூட்டு அணிந்த அரசியல் பண்டிதர்கள் இதன் மீது தங்கள் வியாசங்களை பல்வேறு சிக்கலான வார்த்தைகளை போட்டு பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சோர்வுற்றும் தளர்வடைந்தும் இந்த பண்டிதர்களின் தாக்குதல்களையும் கேலி கிண்டல்களையும் எதிர் கொண்டு வருகிறார்கள்.

இத்தனை நாட்கள் சோர்வுற்றும் தளர்வடைந்தும் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மலர்ந்த முகங்களுடன் எப்போதும் அவர்கள் தங்களுடனே பத்திரமாக சேமித்து வைத்துள்ள செருக்குடனும் இந்த உரையாடல்களில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களைப் பற்றி இங்கு கூறுவது ஏற்கனவே நொந்து போயிருக்கின்ற ஆத்மாக்களை மேலும் குத்திக் குதறும் பாவத்தை எனக்கு சேர்க்கும். எனவே அவர்களைப் பற்றி நான் ஒன்றும் கூற முயற்சிக்கவில்லை.  ஆனாலும் இப்போதைக்கு அவர்களுடைய ஒரே பிரார்த்தனை என்று எனக்குத் தோன்றுவது  – இந்த கருத்துக்கணிப்புக்களை முறியடிக்கும் வண்ணம் குறைந்தது 10 இடங்களிலாவது வந்தாக வேண்டும்.  2013-ல் 8 இடங்கள் என்றால் இப்போது குறைந்தது இரட்டைப் படையிலாவது வெற்றி பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

சரி – இந்த வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணக்கெடுப்பு பற்றி 67.21 சதவிகிதத்தில் கரைந்துள்ள என்னுடைய பார்வை -

இன்று மாலை ஊடகங்களில் நார் நாராகக் கிழித்து தோரணம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கருத்துக் கணக்கெடுப்பு  பிற்பகல் 3 மணி வரை எடுத்ததாகக் கூறப்படுகிறது.  3 மணிக்குப் பிறகு பெருத்த சதவிகிதத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. சொல்லப்போனால் 3 மணி வரை நடந்த வாக்குப் பதிவுக்கு ஏறத்தாழ இரு மடங்கு  வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. அதை  இந்த பண்டிதர்கள் கணக்கில் எடுத்தார்களா   என்று தெரியவில்லை.

இன்னொரு விஷயம் – நம்முடைய பாராளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட இதுபோன்ற கருத்துக் கணிப்புக்கள் பல மாநிலங்களில் சொதப்பி எடுத்து இருக்கின்றன   என்பதையும் நாம் சற்று கவனத்துடன் நினைவில் கொள்ள வேண்டும்.

என்னுடைய மனக்குறளி மீண்டும் மீண்டும் எனக்கு வலியுறுத்திக் கொண்டே வருவது இதுதான் – டெல்லியில் மீண்டும் தொங்கு சட்டசபை வருவதற்கான அறிகுறிகள் தான் அதிகம் உள்ளன என்றுதான் எனக்குத்  தோன்றுகிறது.
 
நான் டெல்லியின் நீரை  34 வருடங்களாகப் பருகி வருகிறேன்.  டெல்லியின் காற்றை சுவாசித்து இருக்கிறேன்.  டெல்லி எனக்கு 34 ஆண்டுகளாக சோறிட்டு இருக்கிறது.  டெல்லியில் ஜீவசமாதியாக அடக்கமாகியுள்ள மகாபுருஷர்கள்  பலரும் என் மீது தங்கள் அருள் மழையை பொழிந்து உள்ளனர்.  

எனவே இதனை டெல்லியின்  மீதான என்னுடைய  சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.



அப்படி தொங்கு சட்டமன்றமாக வரவில்லை என்றால் உங்களைப் போலவே நானும்  மிகுந்த   மகிழ்ச்சி அடைவேன்.

இரண்டு நாட்கள் முழு ஓய்வு எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை (10-ந் தேதி) நம்முடைய டிவியின் பண்டிதர்கள் இன்னொரு புதிய கோட்டு சூட்டை மாட்டிக் கொண்டு லபோ லபோ என்று தொண்டை கிழியக் கதறப் போகிறார்கள். 

தேர்தல் முடிவுகளையும் உரையாடலில் பங்கேற்க வருபவர்களையும்  நார் நாராகக் கிழித்து எறிய ஆயத்தமாக இருக்கிறார்கள்.

என்னைப் போன்ற ஆத்மாக்களும் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம். 


காத்திருப்போம்.